7 முறை சாம்பியனான செரீனா வில்லியம்ஸ்

ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாமான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்னில் நேற்று தொடங்கியது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் 7 முறை சாம்பியனான 39 வயது செரீனா வில்லியம்ஸ், ஜெர்மனியின் லாரா சிஜ்முன்டை தோற்கடித்து 2-வது சுற்றுக்கு முன்னேறினார். ஆஸ்திரேலிய ஓபனில் இது அவரது 100-வது ஆட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆண்கள் ஒற்றையர் பிரிவில் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் நடப்பு சாம்பியனும், நம்பர் ஒன் வீரருமான நோவக் ஜோகோவிச் (செர்பியா) 6-3, 6-1, 6-2 என்ற நேர்செட்டில் பிரான்ஸ் வீரர் ஜெர்மி சார்டியை தோற்கடித்து 2-வது சுற்றுக்குள் அடியெடுத்து வைத்தார். மற்றொரு ஆட்டத்தில் அமெரிக்க ஓபன் சாம்பியனும், தரவரிசையில் 3-வது இடத்தில் இருப்பவருமான டொமினிக் திம் (ஆஸ்திரியா) 7-6 (7-2), 6-2, 6-3 என்ற நேர்செட்டில் கஜகஸ்தான் வீரர் மிகைல் குகுஷ்கினை தோற்கடித்து 2-வது சுற்றுக்குள் நுழைந்தார். இந்த ஆட்டம் 2 மணி 40 நிமிடம் நீடித்தது.