அவசியம் அறிந்துகொள்ள வேண்டிய 6 தகவல்..!

முதல்வர் ஆலோசனை :

1) கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்தும் வகையில் தமிழகத்தில் உள்ள 3 மாவட்டங்கள் உள்பட இந்தியா முழுவதும், 80 மாவட்டங்களை தனிமைப்படுத்தி வைக்குமாறு சம்பந்தப்பட்ட மாநில அரசுகளுக்கு, மத்திய அரசு ஆலோசனை வழங்கி இருக்கிறது.

 

தனிமைப்படுத்தப்பட வேண்டிய  மாவட்டங்களின் பட்டியலில், தமிழகத்தில் உள்ள சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு ஆகிய 3 மாவட்டங்கள் இடம்பெற்றுள்ளன.

 

இந்த நிலையில், மேற்கூறிய 3 மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி இன்று,  காணொலிக்காட்சி மூலம் தலைமைச்செயலகத்தில் இருந்தவாறு, ஆலோசனை நடத்தினார்.

2) கொரோனா  முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக, சட்டப்பேரவை கூட்டத்தொடரை ஒத்திவைக்க வேண்டும் என்று திமுக வலியுறுத்தி வருகிறது.

இந்த நிலையில்,  நடப்பு சட்டப்பேரவைக் கூட்டத்தொடரை திமுக புறக்கணிக்கப்போவதாக அக்கட்சியின் கொறடா சக்கரபாணி அறிவித்துள்ளார்.  அதேபோல், காங்கிரஸ், முஸ்லிம் லீக் ஆகிய கட்சி சட்டமன்ற உறுப்பினர்களும் சட்டப்பேரவை கூட்டத்தொடரை புறக்கணிக்கப்போவதாக அறிவித்துள்ளனர்.

3) இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை, 415 ஆக உயர்ந்துள்ளது. இதற்கிடையே, கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ள மாவட்டங்களை  தனிமைப்படுத்த உத்தரவிட்டதை மாநில அரசுகள் கடுமையாக பின்பற்றி, விதிமுறைகளை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

மாநில அரசுகள், முழுமையாகப் பின்பற்ற வேண்டும் :

4) பிரதமர் மோடி, தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில்,” கொரோனா விவகாரத்தில், கட்டுப்பாடுகளை மக்கள் தீவிரமாக எடுத்துக்கொள்ளவில்லை.

கட்டுப்பாடுகளை முழுமையாகப் பின்பற்றி, உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் பாதுகாத்துக்கொள்ளுங்கள். வழிகாட்டுதல்களை தீவிரமாக எடுத்துக்கொள்ளுங்கள்.  கொரோனா விவகாரத்தில், வழிகாட்டுதல்களை மாநில அரசுகள் முழுமையாகப் பின்பற்ற வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார்.

5) இந்திய அளவில் அங்கீகரிக்கப்பட்ட கொரோனா பரிசோதனை மையங்களின் பட்டியலை வெளியிட்டது இந்திய மருத்துவ கவுன்சில்.

இதுவரை, 87 பரிசோதனை மையங்கள் தொடங்கப்பட்டுள்ளன, இன்னும் 27 பரிசோதனை மையங்களை திறக்கவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

கடும் நடவடிக்கை எடுக்கப்படும் :

6) சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தனது டுவிட்டர் பதிவில்,” வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பயணிகள், அரசின் அறிவுரையை மீறி வெளியே நடமாடினால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

தனிமையில் இருக்குமாறு அறிவுறுத்திய சிலர் வீட்டில் இருக்காமல் வெளியே சென்று வருகின்றனர்.

அறிவுறுத்தப்பட்ட பயணிகள் வெளியே நடமாடுவது அச்சுறுத்தலாக அமைந்துள்ளது.

அரசின் அறிவுரையை மீறிய நபர்களின் விவரம் மாவட்ட நிர்வாகம், போலீசிடம் தரப்பட்டுள்ளது.” என பதிவிட்டுள்ளார்.