4 கேட்ச், 2 விக்கெட்: புதிய ஸ்டைலில் கொண்டாட்டம் சென்னை சூப்பர் கிங்ஸ்

14வது ஐபிஎல் தொடரில் நேற்று (ஏப்ரல் 19) மும்பை வாங்கடே மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதியது. டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் சென்னையை அணியை பேட்டிங் செய்ய அழைத்தார். முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 12 ஓவர்கள் வரை விளையாடிய வேகத்தைப் பார்த்தால் 200 ரன்களைத் தாண்டும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதற்குப் பிறகு விக்கெட்டுகள் விழுந்ததால் சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்களை இழந்து 188 ரன்களை எடுத்தது. ஃபாஃப் டு பிளெசிஸ் அதிரடியாக விளையாடி 17 பந்துகளில் 2 சிக்ஸ் 4 ஃபோர் உள்பட 33 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

மொயின் அலி 20 பந்துகளில் 2 சிக்ஸ் 1 ஃபோர் என 26 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். சுரேஷ் ரெய்னா 15 பந்துகளில் 1 சிக்ஸ் 1 ஃபோர் என 18 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அம்பத்தி ராயுடு 17 பந்துகளில் 3 சிக்ஸ்கள் விளாசி 27 ரன்கள் விக்கெட்டை பறிகொடுத்தார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தல தோனி இந்த போட்டியிலும் ரன் எடுக்கத் தடுமாறினார். அதே போல, ரவீந்திர ஜடேஜா 7 பந்துகளை சந்தித்து ஒரே ஒரு ஃபோர் மட்டும் அடித்து ஏமாற்றம் அளித்தார்.

189 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர்கள் ரவீந்திர ஜடேஜா மற்றும் மொயின் அலியின் சுழற்பது வீச்சை எதிர்கொள்ள முடியாமல் நிலைகுலைந்து போனார்கள். அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 143 ரன்கள் மட்டுமே குவித்தது. இதன் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 45 ரன்கள் வித்தியாசத்தில் பெரும் வெற்றி பெற்றது.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ரவீந்திர ஜடேஜா பேட்டிங்கில் சோபிக்காவிட்டாலும் பந்துவீச்சிலும் ஃபீல்டிங்கிலும் அசத்திவிட்டார். ஜடேஜா தனது சுழல் பந்துவீச்சில், ராஜஸ்தான் அணியின் ஜோஸ் பட்லரை போல்ட் செய்தும், டேவிட் மில்லரை எல்.பி.டபில்யூ முறையிலும் விக்கெட்டை வீழ்த்தி அவர்களை வெளியேற்றினார். ஜடேஜா 2 விக்கெட்டுகளை எடுத்ததோடு மட்டுமில்லாமல், மனன் வோஹ்ரா, ரியான் பரக், கிறிஸ் மோரிஸ், ஜெயதேவ் உனாகட் ஆகிய 4 வீரர்களின் கேட்ச்களைப் பிடித்து அவுட் ஆக்கி அசத்தினார்.

ராஜஸ்தான் ராயல் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணியின் வீரர் ஜடேஜா 2 விக்கெட்டுகளை வீழ்த்தியதோடு மட்டுமில்லாமல் 4 கேட்ச்களையும் பிடித்து அவர் சந்தோஷத்தில் 4 விரல்களைக் காட்டி புதிய ஸ்டைலில் டான்ஸ் ஆடி கொன்டாடினார். சந்தோஷத்தில் ஜடேஜா புதிய ஸ்டைலில் தெறிக்கவிட்டு டான்ஸ் ஆடிய வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.