3-வது ஒருநாள் போட்டி: நெதர்லாந்தை 9 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது பாகிஸ்தான்

பாகிஸ்தான் அணியில் அதிகபட்சமாக கேப்டன் பாபர் அசாம் 91 குவித்து ஆட்டமிழந்தார். ரொட்டர்டாம், நெதர்லாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி 3 ஒருநாள் போட்டி கொண்ட தொடரில் விளையாடுகிறது. முதல் 2 போட்டிகளில் வெற்றி பெற்று பாகிஸ்தான் அணி தொடரை வென்று இருந்த நிலையில் இன்று 3-வது ஒருநாள் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணியில் அதிகபட்சமாக கேப்டன் பாபர் அசாம் 91 குவித்து ஆட்டமிழந்தார். மற்ற வீரர்கள் பெரிதாக சோபிக்காத நிலையில் அந்த அணி 49.4 ஓவர்களில் 206 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இதையடுத்து 207 ரன்கள் வெற்றி இலக்குடன் நெதர்லாந்து அணி களமிறங்கியது. அந்த அணியின் தொடக்க வீரர் விக்ரம்ஜித் சிங் அரைசதம் அடித்த நிலையில் ஆட்டமிழந்தார். அவரை தவிர டாம் கூப்பர் (62 ரன்கள்) சிறப்பான பங்களிப்பை வழங்கினார். ஏனைய வீரர்கள் சோபிக்காத நிலையில் நெதர்லாந்து அணி 197 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்து 9 ரன்கள் வித்தியாசத்தில் போராடி தோல்வி அடைந்தது. பாகிஸ்தான் அணி தரப்பில் 19 வயதே ஆன நசீம் ஷா 5 விக்கெட்களை கைப்பற்றி அசத்தினார். இதன் மூலம் பாகிஸ்தான் அணி 3 போட்டிகள் கொண்ட தொடரை 3-0 என்ற கணக்கில் முழுமையாக வென்றுள்ளது.