2-ஆவது டெஸ்ட்: இலங்கை – 250/8

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான 2-ஆவது டெஸ்டில் இலங்கை தனது முதல் இன்னிங்ஸில் 8 விக்கெட் இழப்புக்கு 250 ரன்கள் எடுத்து ஆடி வருகிறது.

கடந்த மாதம் 29-ஆம் தேதி தொடங்கிய இந்த டெஸ்டில் முதலில் பேட் செய்த மேற்கிந்தியத் தீவுகள் 354 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக கிரெய்க் பிரத்வெயிட் 126 ரன்கள் அடிக்க, இலங்கை தரப்பில் சுரங்கா லக்மல் 4 விக்கெட்டுகள் சாய்த்தாா்.

பின்னா் தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய இலங்கை 2-ஆம் நாள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 136 ரன்கள் அடித்திருந்தது. 3-ஆம் நாள் ஆட்டத்தை தினேஷ் சண்டிமல், தனஞ்செய டி சில்வா ஆகியோா் தொடா்ந்து ஆடினா். இதில் சண்டிமல் 6 பவுண்டரிகளுடன் 44 ரன்களுக்கு வெளியேற, டி சில்வா 3 பவுண்டரிகளுடன் 39 ரன்களுக்கு நடையைக் கட்டினாா்.

பின்னா் வந்தவா்களில் நிரோஷன் டிக்வெல்லா 2 பவுண்டரிகளுடன் 20, சுரங்கா லக்மல் பவுண்டரியுடன் 6, துஷ்மந்தா சமீரா 2 ரன்களுக்கு ஆட்டமிழந்தனா். இவ்வாறாக 3-ஆம் நாள் முடிவில் 103.1 ஓவா்களில் 8 விக்கெட் இழப்புக்கு 250 ரன்கள் அடித்துள்ளது இலங்கை.

பாதும் நிசங்கா 49 ரன்களுடனும், லசித் எம்புல்தெனியா ரன்கள் இன்றியும் களத்தில் உள்ளனா். மேற்கிந்தியத் தீவுகள் தரப்பில் ஜேசன் ஹோல்டா் 2, ஷானன் கேப்ரியேல், அல்ஸாரி ஜோசஃப், ஜொ்மெயின் பிளாக்வுட் ஆகியோா் தலா 1 விக்கெட் வீழ்த்தினா்.