2-வது டெஸ்ட்: இந்தியா- இங்கிலாந்து மோதல்

விராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்து அணிக்கு எதிராக 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் போட்டி விளையாடி வருகிறது.
2-வது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு உட்பட்ட இந்த தொடரில் நாட்டிங்காமில் நடந்த முதலாவது டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது. இதில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 183 ரன்னில் ‘ஆல்-அவுட்’ ஆனாலும், 2-வது இன்னிங்சில் 303 ரன்கள் குவித்து முதல் இன்னிங்ஸ் பின்னடைவை சமாளித்தது. அந்த அணியின் கேப்டன் ஜோ ரூட் முறையே 64, 109 ரன்கள் எடுத்து அணியின் துணாக விளங்கினார்.

முதல் இன்னிங்சில் 278 ரன்களை சேர்த்து 95 ரன்கள் முன்னிலை பெற்ற இந்திய அணி 209 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் 2-வது இன்னிங்சை ஆடி 4-வது நாள் முடிவில் ஒரு விக்கெட்டுக்கு 52 ரன்கள் எடுத்தது. இறுதி நாளில் இந்தியா மேலும் 157 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறலாம் என்று இருந்த நிலையில் இருந்தது இந்நிலையில் மழை காரணமாக கடைசி நாள் ஆட்டம் முழுமையாக பாதிக்கப்பட்டதால் இந்திய அணியின் வெற்றி வாய்ப்பு பறிபோனது. இரு அணியிலும் வேகப்பந்து வீச்சாளர்கள் மிரட்டும் வகையில் பந்து வீசினார்கள். இந்திய அணியின் வேகப்பந்து வீச்சை பொறுத்தமட்டில் குறிப்பாக ஜஸ்பிரித் பும்ரா இரு இன்னிங்சிலும் சேர்த்து 9 விக்கெட்டுகள் வீழ்த்தி மீண்டும் விசுவரூபம் எடுத்தார்.
இந்த நிலையில் இந்தியா-& இங்கிலாந்து அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் தொடங்குகிறது.