2-வது டெஸ்ட்: முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து 303 ரன்கள்

நியூசிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 303 ரன்கள் எடுத்துள்ளது.

லார்ட்ஸ் மைதானத்தில் கடந்த வாரம் தொடங்கிய இங்கிலாந்து – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட், டிராவில் முடிவடைந்தது. 2-வது டெஸ்ட், பிர்மிங்ஹமில் நடைபெறுகிறது.

காயம் காரணமாக நியூசிலாந்து சுழற்பந்துவீச்சாளர் சாண்ட்னர், நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன், நியூசிலாந்து விக்கெட் கீப்பர் வாட்லிங் ஆகியோர் விலகினார்கள். இதனால் டாம் லதம் கேப்டனாகச் செயல்படுகிறார். வில்லியம்சனுக்குப் பதிலாக வில் யங்கும் வாட்லிங்குக்குப் பதிலாக டாம் பிளெண்டல்லும் நியூசி. அணியில் தேர்வாகியுள்ளார்கள்.

டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட், பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.

முதல் நாள் முடிவில் இங்கிலாந்து அணி 90 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 258 ரன்கள் எடுத்தது. பர்ன்ஸ் 81 ரன்கள் எடுத்தார். லாரன்ஸ் 67, மார்க் வுட் 16 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள்.

இந்நிலையில் 2-வது நாளில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 101 ஓவர்களில் 303 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. மார்க் வுட் 41 ரன்கள் எடுத்தார். லாரன்ஸ் 81 ரன்கள் எடுத்துக் கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். நியூசிலாந்து அணித் தரப்பில் டிரெண்ட் போல்ட் 4 விக்கெட்டுகளும் ஹென்றி 3 விக்கெட்டுகளும் எடுத்தார்கள்.