2வது இன்னிங்ஸ்: 36 ரன்களில் சுருண்டது இந்தியா

MOHALI, INDIA - MARCH 10: Jhye Richardson of Australia celebrates taking the wicket of Rohit Sharma of India during game four of the One Day International series between India and Australia at Punjab Cricket Association Stadium on March 10, 2019 in Mohali, India. (Photo by Robert Cianflone/Getty Images)
இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இவ்விரு அணிகள் இடையிலான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதலாவது டெஸ்ட் போட்டி பகல்-இரவு மோதலாக (பிங்க் பந்து டெஸ்ட்) அடிலெய்டில் நேற்று முன்தினம் தொடங்கியது.
‘டாஸ்’ ஜெயித்த இந்திய கேப்டன் விராட் கோலி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். இதன்படி முதலில் பேட் செய்த இந்திய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 89 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 233 ரன்கள் எடுத்து இருந்தது.  அஸ்வின் 15 ரன்களுடனும், விக்கெட் கீப்பர் விருத்திமான் சஹா 9 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.
2 ஆம் நாள் ஆட்டம் துவங்கியதுமே இந்திய அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ஏனெனில், 300 ரன்களை இந்தியா எட்டும் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், மேற்கொண்டு 11 ரன்களை மட்டுமே அடித்து 4 விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது. இதன் மூலம் இந்திய அணி முதல் இன்னிங்சில் 244- ரன்கள் எடுத்தது.  இதையடுத்து, ஆஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்சை துவக்கியது.
இந்திய அணியில் உமேஷ் யாதவ், நட்சத்திர பந்து வீச்சாளர் பும்ரா ஆகியோரின் வேகத்தில் ஆஸ்திரேலிய அணி வீரர்கள் தடுமாறினர்.  மேத்யூ வேட் (8 ரன்கள்)  ஜோ (8 ரன்கள்) ஆகியோர் பும்ரா பந்தில் ஆட்டமிழந்தனர். 3 ஆம் விக்கெட்டுக்கு களம் இறங்கிய லாபுசேன் (47 ரன்கள் ) ஓரளவு தாக்குப்படித்தார். எனினும் மறுமுனையில் விக்கெட்டுகள் அடுத்தடுத்து வீழ்ந்தன. உமேஷ் யாதவும் தன் பங்குக்கு கடும் நெருக்கடி கொடுத்தார்.
அதேபோல், அஸ்வின் பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் ஆஸ்திரேலிய அணி வீரர்கள் விழிபிதுங்கினர். அவரின் மாயாஜால சுழலில் சிக்கிய ஆஸ்திரேலிய அணி வீரர்கள் அடுத்தடுத்து பெவிலியன் திரும்பினர். 72.1 ஓவர்கள் தாக்குப்பிடித்த ஆஸ்திரேலிய அணி 191 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.  ஆஸ்திரேலிய அணி தரப்பில் அதிகபட்சமாக டி பெய்ன்  ஆட்டமிழக்காமல் 73  ரன்கள் அடித்தார்.
இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக அஸ்வின் 4 விக்கெட்டுகளையும் உமேஷ் யாதவ் 3 விக்கெட்டுகளையும் பும்ரா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இதையடுத்து, 53 ரன்கள் முன்னிலை பெற்ற இந்திய அணி தனது 2-வது இன்னிங்சை விளையாடியது.
பிரித்வி ஷா, மயங்க் அகர்வால் ஜோடி மீண்டும் மோசமான துவக்கம் கொடுத்தது. பிரித்வி 4 ரன் எடுத்து போல்டானார். இரண்டாவது நாள் முடிவில் இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் 1 விக்கெட்டுக்கு 9 ரன்கள் எடுத்து, 62 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது. மயங்க் அகர்வால் (5), ‘நைட் வாட்ச்மேன்’ பும்ரா (0) அவுட்டாகாமல் இருந்தனர்.

மயங்க் அகர்வால் 9 ரன்கள் எடுத்த  போது டெஸ்ட் போட்டியில் அதிவேகமாக 1000 ரன்களை கடந்த 3 வது இந்திய வீரர் என்ற சாதனையை புரிந்து உள்ளார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடந்து வரும் அடிலெய்ட் டெஸ்டில் வினோத் காம்ப்ளி மற்றும் சேதேஸ்வர் புஜாரா ஆகியோர் 1,000 டெஸ்ட் ரன்களை எட்டியதன் பின்னர், இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரர் மயங்க் அகர்வால் மூன்றாவது அதிவேக இந்திய பேட்ஸ்மென் ஆவார்.
முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் வினோத் காம்ப்ளி வெறும் 14 இன்னிங்ஸ்களில் 1000 ரன்களை கடந்தார். புஜாரா மற்றும் கவாஸ்கர் ஆகியோர் முறையே 18 மற்றும் 21 வது இன்னிங்சில் 1000 ரன்களுக்கு மேல் எடுத்து உள்ளனர்.
மயங்க் அகர்வால் இதுவரை தனது குறுகிய டெஸ்ட் வாழ்க்கையில் நீண்ட இன்னிங்ஸில் விளையாடும் திறனைக் வெளிப்படுத்தி உள்ளார். 29 வயதான அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது மூன்று சதங்களில் இரண்டை இரட்டை சதங்களாக மாற்றியுள்ளார், இதில் அதிகபட்சமாக 243 ரன்கள் எடுத்து உள்ளார்.
இன்று தொடர்ந்து விளையாடிய இந்திய பேட்ஸ் மேன்கலீன் விக்கெட் மளமள வென சரிந்தது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் 2வது இன்னிங்ஸ் 3 வது நாளில்   இந்தியா 36 ரன்கள் எடுப்பதற்குள் அனைத்து  விக்கெட்டுகளையும் இழந்தது. முகமது ஷமி காயம்  காரணமாக வெளியேறினார். காயம் காரண்மாக  அநேகமாக அவர் இன்று பந்து வீச மாட்டார் . இந்தியா தனது  மிகக் குறைந்த டெஸ்ட் ஸ்கோரை பதிவு செய்து உள்ளது. ஆஸ்திரேலியா அணியின் வெற்றி பெற 90 ரன்கள் தேவை. தொடர்ந்து ஆஸ்திரேலிய தொடக்க வீரர்கள் பேட்டிங் செய்ய தொடங்கினர்.