20 ஓவர்: தென் ஆப்பிரிக்கா பந்து வீச்சு தேர்வு

7-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது. தற்போது ‘சூப்பர்-12’ சுற்று ஆட்டங்கள் அரங்கேறி வருகிறது. துபாயில் இன்று நடைபெறும் குரூப்-1 பிரிவு லீக் ஆட்டத்தில்
வெஸ்ட்இண்டீஸ் அணி, தென்ஆப்பிரிக்காவை சந்திக்கிறது. இந்தப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பந்து வீச முடிவு செய்துள்ளது. இதன்படி, வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் செய்கிறது.

பொல்லார்ட் தலைமையிலான வெஸ்ட்இண்டீஸ் அணி தனது தொடக்க ஆட்டத்தில் இங்கிலாந்துக்கு எதிராக 55 ரன்னில் சுருண்டு மோசமான தோல்வியை சந்தித்தது. உலக கோப்பை போட்டியில் அந்த அணியின் குறைவான ஸ்கோர் இது என்பதால் கடும் விமர்சனத்துக்கு ஆளானது. அதிரடி பட்டாளத்தை கொண்டுள்ள அந்த அணியில் கிறிஸ் கெய்ல் (13 ரன்) தவிர வேறு யாரும் இரட்டை இலக்கத்தை எட்டவில்லை. இதனால் அந்த அணி சரிவில் இருந்து மீண்டு வர வேண்டிய நெருக்கடியில் இருக்கிறது.

தெம்பா பவுமா தலைமையிலான தென்ஆப்பிரிக்க அணி தன்னுடைய முதலாவது ஆட்டத்தில் 5 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவிடம் வீழ்ந்தது. இந்த ஆட்டத்தில் தோல்வியை சந்தித்தால் அரைஇறுதி வாய்ப்பு மங்கும் என்பதால் இரு அணிகளும் வெற்றிக்காக கடுமையாக மல்லுகட்டும். எனவே இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது.