2-வது ஒரு நாள் போட்டி: ஜிம்பாப்வே அணியை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது ஆஸ்திரேலியா

ஜிம்பாப்வேக்கு எதிரான 2-வது ஒரு நாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. டவுன்ஸ்வில்லி, ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள ஜிம்பாப்வே அணி அங்கு 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் ஆடுகிறது. அதில் முதலாவது ஒரு நாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்று பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் தொடரில் 2-வது ஆட்டம் இன்று நடைபெறுகிறது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் பின்ச் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன் படி முதலில் பேட்டிங் ஆடிய ஜிம்பாப்வே அணி வீரர்கள் ஆஸ்திரேலிய பந்து வீச்சாளர்களின் அபார பந்துவீச்சால் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். அந்த அணி 27.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 96 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. அந்த அணியில் அதிகபட்சமாக சீன் வில்லியம்ஸ் 29 ரன்களும், சிக்கந்தர் ராசா 17 ரன்களும் எடுத்தனர். அடுத்து 97 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் ஆஸ்திரேலிய அணி களம் இறங்கியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் ஆரோன் பின்ச் மற்றும் டேவிட் வார்னர் களம் இறங்கினர். இந்நிலையில், 3-வது ஓவரை வீசிய ரிச்சர்ட் ங்கராவா அந்த ஓவரில் இரு தொடக்க ஆட்டக்காரர்களையும் அடுத்தடுத்து ஆட்டமிழக்கச் செய்தார். அதன் பின்னர் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரி ஆகியோர் களம் புகுந்தனர். மேற்கொண்டு விக்கெட் விழாமல் பார்த்துக் கொண்ட இந்த ஜோடி சிறப்பாக ஆடி அணியை வெற்றி பெற செய்தனர். இறுதியில் ஆஸ்திரேலிய அணி 14.4 ஓவர்களில் 100 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அந்த அணியில் ஸ்மித் 47 ரன்கள் மற்றும் அலெக்ஸ் கேரி 26 ரன்களுடனும் அவுட் ஆகாமல் இருந்தனர். இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இரு அணிகளுக்கு இடையேயான 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி இதே மைதானத்தில் வரும் 3-ந் தேதி நடைபெறுகிறது.