10-ம் வகுப்பு பொதுத்தேர்வு தேதி மாற்றம்

தமிழகம் மற்றும் புதுச்சேரியில், கடந்த மார்ச் மாதம் நடைபெற இருந்த 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு கொரோனா ஊரடங்கால் தள்ளிவைக்கப்பட்டது. மேலும், நாடு முழுவதும் கொரோனா பரவலைத் தடுக்கும் விதமாக, 4-வது முறையாக  மே 31-ந்தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே ’ஜூன் 1-ந்தேதி முதல் ஜூன் 12-ந்தேதி 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறும்’ என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால், 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை தள்ளிவைக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்தனர்.

இதனால், இன்று முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமியுடன் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து, அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் ஆலோசனை நடத்தினார்.

ஆலோசனைக்குப் பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், ’கொரோனா பரவல் குறையாததால், மாணவர்களின் நலன் கருதி 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு தேதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

ஜூன் 15-ந்தேதி முதல் ஜூன் 25-ந்தேதி வரை 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் காலையில் நடைபெறும். பொதுத்தேர்வின்போது ஒரு தேர்வு அறையில், 10 மாணவர்கள் மட்டுமே எழுத அனுமதிக்கப்படுவர்.

மேலும் 11-ம் வகுப்புக்கான விடுபட்ட தேர்வு ஜூன் 16-ந்தேதி நடைபெறும். 12-ம் வகுப்புக்கான எஞ்சிய தேர்வு ஜூன் 18-ந்தேதி நடத்தப்படும்.’

இவ்வாறு அமைச்சர்  கூறினார்.

புதிய தேர்வு அட்டவணை:

ஜூன் 15-ந்தேதி : மொழிப்பாடம்
ஜூன் 17-ந்தேதி : ஆங்கில பாடம்
ஜூன் 19-ந்தேதி : கணிதம்
ஜூன் 20-ந்தேதி : விருப்ப மொழி
ஜூன் 22-ந்தேதி : அறிவியல்
ஜூன் 24-ந்தேதி : சமூக அறிவியல்
ஜூன் 25-ந்தேதி : தொழிற்பாடம்