விஜய்க்கு வில்லனாக அர்ஜுன்?

விஜயின் 67-வது படத்தில் அர்ஜுனை வில்லனாக நடிக்க வைக்க படக்குழுவினர் ஆலோசிப்பதாக தகவல் பரவி உள்ளது. வாரிசு படத்தை விஜய் முடித்து விட்டு லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தில் நடிப்பதை ஏற்கனவே உறுதி செய்து தயாரிப்புக்கு முந்தைய வேலைகளை தொடங்கி உள்ளனர். இது விஜய்க்கு 67-வது படம். இந்த படம் குறித்த அதிகாரபூர்வ தகவல்கள் எதையும் பகிராத போதிலும் அவ்வப்போது புதிய தகவல்கள் வலைத்தளத்தில் கசிந்து வருகின்றன. இதில் விஜய்க்கு 50 வயது தாதா கதாபாத்திரம் என்றும் அவருக்கு வில்லன்களாக 6 முன்னணி நடிகர்கள் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த படத்தை தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னட, மலையாள மொழிகளில் எடுக்க இருப்பதால் ஒவ்வொரு மொழியில் இருந்து ஒரு வில்லன் நடிக்கிறார். இந்தி நடிகர் சஞ்சய்தத், மலையாள நடிகர் பிருதிவிராஜ் ஆகியோர் பரிசீலனையில் உள்ளனர். தமிழில் இருந்து அர்ஜுனை வில்லனாக நடிக்க வைக்க படக்குழுவினர் ஆலோசிப்பதாக தகவல் பரவி உள்ளது. கன்னட வில்லன் தேர்வும் நடக்கிறது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக திரிஷா நடிக்க வாய்ப்பு உள்ளது. இன்னொரு நாயகியும் இருக்கிறார். அந்த கதாபாத்திரத்துக்கு சமந்தா பெயர் அடிபடுகிறது. படப்பிடிப்பை நவம்பர் அல்லது டிசம்பரில் தொடங்க உள்ளனர்