மணிரத்னம் படத்தை மறுப்பது முட்டாள்தனம்.. மனிஷா கொய்ராலா

தமிழில் இந்தியன், முதல்வன் போன்ற படங்களில் நடித்து மிகவும் பிரபலமானவர் மனிஷா கொய்ராலா. இவர் பாலிவுட்டில் முன்னணி நடிகையாகவும் வலம் வந்தார். நடிகை மனிஷா கொய்ராலா தமிழில் பம்பாய், இந்தியன், முதல்வன் உள்ளிட்ட படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். ஏராளமான இந்தி படங்களிலும் நடித்து புகழ் பெற்றார். 2010-ல் சாம்ராட் தேகல் என்பவரை மணந்து 2 வருடத்தில் விவாகரத்து செய்தார். பின்னர் புற்றுநோய் பாதிப்பில் சிக்கி வெளிநாட்டுக்கு சென்று சிகிச்சை பெற்று அதில் இருந்து மீண்டார். மனிஷா கொய்ராலா தற்போது படங்களில் நடிப்பதை குறைத்துக்கொண்டார். அவர் மணிரத்னம் படமான பம்பாய் படத்தில் நடித்தது பற்றி சமீபத்தில் பேசியிருக்கிறார். இந்த அனுபவம் பற்றி அவர் கூறியிருப்பதாவது, எனக்கு பம்பாய் வாய்ப்பு கிடைத்தபோது, ​​நான் என்னுடைய 20 வயதில் அம்மாவாக நடித்ததால் அதை செய்ய வேண்டாம் என்று மக்கள் என்னிடம் சொன்னார்கள். அடுத்த 10 ஆண்டுகளில் எனக்கு பாட்டி வேடங்கள் கிடைக்கும் என்று அவர்கள் நினைத்தார்கள். ஆனால் மணிரத்னம் படத்தை மறுப்பது முட்டாள்தனமாக இருக்கும் என்பதையும் சொன்னார்கள். இந்தப் படம்தான் எனக்கு மிகப்பெரிய பெயரை பெற்று தந்தது என்று கூறியிருக்கிறார்.