புஷ்பா பட பாணியில் போஸ் கொடுத்த நியூயார்க் நகர மேயர்…

புஷ்பா’ படத்தில் வருவது போன்ற சைகையுடன், நியூயார்க் மேயர் எரிக் ஆடம்ஸ் புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்தார். நியூயார்க், அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இந்தியாவில் இருந்து குடிபெயர்ந்தவர்கள், இந்திய வம்சாவளியினர் உள்ளிட்டோர் இந்தியாவின் 75-வது ஆண்டு சுதந்திர தினத்தை கொண்டாடினர். அதன் ஒரு பகுதியாக நியூயார்க் நகரில் உள்ள இந்திய சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் பிரம்மாண்ட அணிவகுப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நியூயார்க் நகர மேயர் எரிக் ஆடம்ஸ் பங்கேற்ற இந்த நிகழ்ச்சியில், தேசிய கொடியை ஏந்திச் செல்லும் கிராண்ட் மார்ஷல் விருந்தினராக, தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் தனது மனைவி சினேகாவுடன் கலந்துகொண்டார். இந்த அணிவகுப்பு பேரணியில் லட்சக்கணக்கான இந்தியர்கள் கலந்துகொண்டனர். அப்போது நியூயார்க் மேயர் எரிக் ஆதம்ஸ் எழுதிய பாராட்டுக் கடிதம் அல்லு அர்ஜுனிடம் வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து புகைப்படங்களுக்கு போஸ் கொடுக்கும்போது, ‘புஷ்பா’ படத்தில் வருவது போன்ற சைகையுடன், நியூயார்க் மேயர் எரிக் ஆடம்ஸ் புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்தார். இதனை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்து நியூயார்க் மேயருக்கு அல்லு அர்ஜுன் நன்றி தெரிவித்துள்ளார்.