பிரதமர் மோடியின் வேண்டுகோளை ஏற்று வீட்டில் தேசியக் கொடியேற்றிய நடிகர் ஷாருக்கான்

பிரதமர் மோடியின் வேண்டுகோளை ஏற்று நடிகர் ஷாருக்கான் தனது வீட்டில் குடும்பத்துடன் தேசியக் கொடியேற்றினார். மும்பை, இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைவதை ஒட்டி கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் இல்லந்தோறும் மூவர்ணக் கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. முன்னதாக நாட்டின் 75-வது சுதந்திர தினத்தையொட்டி சுதந்திரப் போராட்ட வீரர்களை நினைவுகூரும் வகையில் ஆகஸ்ட் 13 ஆம் தேதி முதல் நாளை (ஆகஸ்ட் 15) வரை வீடுகளில் தேசியக் கொடியை ஏற்ற வேண்டுமென மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி கோரிக்கை விடுத்திருந்தார். அதனைத் தொடர்ந்து ஏராளமானோர் தங்களது வீடுகளில் தேசியக் கொடியேற்றி வருகின்றனர். அதே போன்று சினிமா துறையினரும் தங்களது இல்லங்களில் தேசியக் கொடியேற்றி வருகின்றனர். அந்த புகைப்படங்களை தங்களது சமூக வலைதளப் பக்கங்களிலும் பகிர்ந்து வருகின்றனர். இந்நிலையில் பிரபல இந்தி நடிகர் ஷாருக்கான் மும்பையிலுள்ள தனது இல்லத்தில் குடும்பத்தாருடன் தேசியக் கொடியேற்றினார். பின்னர் தேசியக் கொடி முன்பு ஷாருக்கான், அவரின் மனைவி கெளரி கான், மகன்கள் ஆர்யன் கான், அப்ராம் ஆகியோர் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். அனைவரும் வெள்ளை நிற உடை அணிந்து தேசியக் கொடியேற்றிய புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.