படத்தின் வெற்றி, தோல்வி உளவியல் ரீதியாக பாதிக்கும் – நடிகர் விக்ரம்

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள படம் ‘கோப்ரா’. இப்படம் வருகிற ஆகஸ்ட் 31-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் சீயான் விக்ரம் கதையின் நாயகனாக நடித்திருக்கும் திரைப்படம் கோப்ரா. இப்படத்தின் கதாநாயகியாக ஸ்ரீநிதி ஷெட்டி நடித்துள்ளார். மேலும் கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான், கே.எஸ்.ரவிக்குமார், ஆனந்த்ராஜ், ரோபோ சங்கர், மீனாட்சி கோவிந்தராஜன், மிருணாளினி ரவி, ரோஷன் மேத்யூ ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கும் இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ பட நிறுவனம் சார்பில் எஸ் லலித்குமார் தயாரித்திருக்கிறார். இப்படம் வருகிற 31-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளதால் புரொமோஷன் பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. கொச்சியில் ஜெயின் கல்லூரி வளாகத்தில் ‘கோப்ரா’ குழுவினர், மாணவ, மாணவிகளை சந்தித்து, அவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தனர். அப்போது விக்ரம் பேசியதாவது, ”உங்களுக்கு ‘அந்நியன்’ படம் பிடிக்கும் என்றால் இந்தப் படமும் பிடிக்கும். சயின்ஸ் பிக்சன், காமெடி, எமோஷன் காட்சிகளும் இருக்கின்றன. என் படங்கள் திரையரங்கில் வெளியாகி 3 வருடங்கள் ஆகிவிட்டன. இப்போது கோப்ரா வெளியாகிறது” என்றார். மேலும், படத்தின் வெற்றி தோல்வி பற்றிய கேள்விக்கு பதிலளித்த அவர், ”படத்தின் வெற்றி, தோல்வி உளவியல் ரீதியான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. பெரும் போராட்டத்துக்குப் பிறகு திரையரங்குகளில் வெளியாகும் படம் ரசிகர்களிடம் சென்றடையாத நேரங்களும் உண்டு. அது கடினமாக இருக்கும்” என்றார்.