நீதிபதியை மாற்றக்கோரி ஓபிஎஸ் தரப்பில் தலைமை நீதிபதியிடம் மீண்டும் முறையீடு

அதிமுக பொதுக்குழு வழக்கில் நீதிபதியை மாற்றக்கோரி ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் மீண்டும் தலைமை நீதிபதியிடம் முறையீடு செய்யப்பட்டுள்ளது. சென்னை, அதிமுக பொதுக்குழு வழக்கில் நீதிபதியை மாற்றக்கோரி ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் மீண்டும் தலைமை நீதிபதியிடம் முறையீடு செய்யப்பட்டுள்ளது. அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கை வேறு நீதிபதிக்கு மாற்ற வேண்டும் என்று கோரி ஐகோர்ட்டு தலைமை நீதிபதிக்கு ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் மனு அளிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் இந்த வழக்கு தொடர்பான விசாரணை இன்று நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்பு வந்தது. அப்போது நீதிபதி ஓபிஎஸ் தரப்புக்கு கடும் கண்டனங்களை தெரிவித்திருந்தார். தீர்ப்பில் தவறு இருந்தால் மேல்முறையீடு செய்யலாம் என்றும் திருத்தம் இருந்தால் தன்னிடம் முறையீடு செய்திருக்கலாம் என்றும் நீதிபதி தெரிவித்தார். மேலும் இது நீதித்துறையை களங்கப்படுத்தும் செயல் என்றும் கீழ்த்தரமான செயல் என்றும் அவர் விமர்சித்திருந்தார். தொடர்ந்து இந்த வழக்கு தொடர்பான விசாரணை நாளை மதியத்துக்கு தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார். . இந்த நிலையில் இன்று பிற்பகலிலும் கூட எனக்கு எதிரான கருத்துகளையும் வக்கீலுக்கு எதிரான கருத்துக்களையும் தெரிவித்துள்ளார் என்றும் என்னுடைய நடவடிக்கைகளை கீழ்தரமான நடவடிக்கை என்று விமர்சித்துள்ளார் என்றும் எனவே நீதிபதியை மாற்ற வேண்டும் என்றும் கோரி ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் மீண்டும் தலைமை நீதிபதியிடம் முறையீடு செய்யப்பட்டுள்ளது. அப்போது இந்த வழக்கை வேறு நீதிபதிக்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை குறித்த கடிதத்தை பரிசீலிப்பதாகவும் கவனத்தில் கொள்வதாகவும் தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார்.