தூத்துக்குடியில் அகில இந்திய கூடைப்பந்து போட்டி: லயோலா கல்லூரி அணி சாம்பியன் பெண்கள் பிரிவில் எஸ்.ஆர்.எம். கல்லூரி அணி வெற்றி

தூத்துக்குடியில் கல்லூரிகளுக்கு இடையே நடந்த 12-வது அகில இந்திய கூடைப்பந்து போட்டியில் ஆண்கள் பிரிவில் சென்னை லயோலா கல்லூரி அணியும், பெண்கள் பிரிவில் சென்னை எஸ்.ஆர்.எம். கல்லூரி அணியும் முதலிடம் பிடித்து கோப்பையை வென்றன தூத்துக்குடி தூத்துக்குடியில் கல்லூரிகளுக்கு இடையே நடந்த 12-வது அகில இந்திய கூடைப்பந்து போட்டியில் ஆண்கள் பிரிவில் சென்னை லயோலா கல்லூரி அணியும், பெண்கள் பிரிவில் சென்னை எஸ்.ஆர்.எம். கல்லூரி அணியும் முதலிடம் பிடித்து கோப்பையை வென்றன. கூடைப்பந்து போட்டி தூத்துக்குடி மாவட்ட கூடைப்பந்து கழகம் மற்றும் தூத்துக்குடி ஜிம்கானா கிளப் இணைந்து நடத்திய 12-வது அகில இந்திய கல்லூரிகளுக்கு இடையேயான டி.எம்.பி. கோப்பைக்கான மின்னொளி கூடைப்பந்து போட்டி தூத்துக்குடி ஜிம்கானா கிளப்பில் நடந்தது. கடந்த 16-ந் தேதி தொடங்கிய இந்த போட்டியில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 8 ஆண்கள் அணிகளும், 6 பெண்கள் அணிகளும் கலந்து கொண்டன. லீக் முறையில் 5 நாட்கள் நடந்த இப்போட்டியின் இறுதி ஆட்டங்கள் நேற்று முன்தினம் இரவு நடந்தது. முதலில் நடந்த பெண்களுக்கான இறுதிப்போட்டியில் சென்னை எஸ்.ஆர்.எம். கல்லூரி அணியும், சென்னை எம்.ஓ.பி. வைஷ்ணவ் கல்லூரி அணியும் மோதின. தொடக்கத்தில் இருந்தே விறுவிறுப்பாக நடந்த இந்த ஆட்டத்தின் இறுதியில் எஸ்.ஆர்.எம். கல்லூரி அணி 59-48 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றது.

லயோலா கல்லூரி அணி அதனை தொடர்ந்து நடந்த ஆண்களுக்கான இறுதிப்போட்டியில் சென்னை லயோலா கல்லூரி அணியும், சென்னை எம்.சி.சி. கல்லூரி அணியும் மோதின. ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே லயோலா கல்லூரி அணி முன்னிலையில் இருந்து வந்தது. இறுதியில் லயோலா கல்லூரி அணி 80-50 என்ற புள்ளிக்கணக்கில் வென்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. அதன் பின்னர் பரிசளிப்பு விழா நடந்தது. விழாவில் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் பொதுமேலாளர் இன்பமணி, மண்டல மேலாளர் சுந்தரேஷ்குமார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பை மற்றும் பரிசு வழங்கினர். விழாவில் மாவட்ட கூடைப்பந்து கழக தலைவர் வி.வி.டி.பிரம்மானந்தம், செயலாளர் டி.ஆர்.பாலமுருகன், பொருளாளர் எஸ்.நார்டன், ஜிம்கானா கிளப் செயலாளர் பிளின்டோ வில்லவராயர், அகில இந்திய தொழில் வர்த்தக சங்க தலைவர் ஜே.பி.ஜோ பிரகாஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.