தமிழ் போஸ்டரை வெளியிட்ட அவதார் படக்குழு

ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் மிக பிரம்மாண்டமாக உருவாகியுள்ள படம் அவதார் 2. அவதார் 2 படக்குழு இறுதிக்கட்ட பணியில் தீவிரம் காட்டி வருகின்றனர். 2009-ஆம் ஆண்டு ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் வெளியான அவதார் திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. பிரம்மாண்டத்தின் உச்சத்தில் அமைந்திருந்த இப்படத்தின் காட்சிகள் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியது. இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் அவதார் 2 ‘அவதார்: தி வே ஆஃப் வாட்டர்’ என்ற பெயரில் பெரும் பொருட் செலவில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ளது. இப்படத்தில் ஜோ சல்டனா, சாம் வோர்திங்டன், சிகோர்னி வீவர், ஸ்டீபன் லாங், கிளிஃப் கர்டிஸ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு நிறைவு பெற்ற நிலையில் படக்குழு தற்போது இறுதிக்கட்ட பணியில் தீவிரம் காட்டி வருகிறது. அவதார் 2 படத்தில் டைட்டானிக் பட கதாநாயகி கேட் வின்ஸ்லெட், நவி வீரர் என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் ‘அவதார்: தி வே ஆஃப் வாட்டர்’ படத்தின் தமிழ் பதிப்பின் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. சமூக வலைத்தளத்தில் வெளியான இந்த போஸ்டர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரித்துள்ளது. இப்படம் உலகம் முழுவதும் 160 மொழிகளில் டிசம்பர் 16-ஆம் தேதி பிரம்மாண்டமாக திரையரங்கில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.