டி.என்.பி.எல். கிரிக்கெட் இறுதிப்போட்டி மழையால் பாதிப்பு: இரு அணிக்கும் கோப்பை பகிர்ந்தளிப்பு..!!

இறுதி போட்டியில் மழை குறுக்கிட்டதை தொடர்ந்து சேப்பாக் சூப்பர் கில்லீஸ் மற்றும் கோவை கிங்ஸ் அணிக்கு கோப்பை பகிர்ந்து அளிக்கப்பட்டது. கோவை, 8 அணிகள் பங்கேற்ற 6வது தமிழ்நாடு பிரிமீயர் லீக் (டி.என்.பில்.) 20 ஓவர் கிரிக்கெட் திருவிழாவின் இறுதி போட்டி கோவை ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி மைதானத்தில் நேற்றிரவு அரங்கேறியது. மகுடத்துக்கான இந்த பலப்பரீட்சையில் நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியும், கோவை கிங்ஸ் அணியும் மோதின. இதனிடையே போட்டித்தொடங்கும் முன் கோவையில் பலத்த மழை பெய்தது. இதனால் இரவு 7.15 மணிக்கு தொடங்க வேண்டிய போட்டி 2 மணி நேரம் காலதாமதமாக 9.15 மணிக்கு தொடங்கியது. மேலும் போட்டி 17 ஓவர்களாக குறை க்கப்பட்டது. டாஸ் வென்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி கேப்டன் கவுசிக் காந்தி பீல்டிங் தேர்வு செய்தார். அந்த அணியின் தொடக்க வீரர்களாக கங்கா ஸ்ரீதர் ராஜூ, விக்கெட் கீப்பர் சுரேஷ் குமார் ஜோடி களம் இறங்கினர். இந்த ஜோடி வந்த வேகத்திலேயே பிரிந்தது. வேகப்பந்து வீச்சாளர் சந்தீப்வாரியர் வீசிய பந்தில் சுரேஷ் குமார் (5 ரன்கள்) அவுட் ஆகி பெவிலியன் திரும்பினார்.

இதனைத்தொடர்ந்து கங்கா ஸ்ரீதர் ராஜூவுடன், சாய் சுதர்சன் இணைந்தர். இந்த ஜோடியினர் நிதானமாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதனால் கோவை கிங்ஸ் அணி 5 ஓவர்களில் 45 ரன்கள் எடுத்தது. கங்கா ஸ்ரீதர் ராஜூ 27 ரன்கள் (17 ரன்கள், 3 பவுண்டரி, 1 சிக்சர்), முகிலேஷ் (7 ரன்கள்) என அடுத்தடுத்து அவுட் ஆனார்கள். இதனை தொடர்ந்து களம் இறங்கிய ஷிஜித் சந்திரன் (0 ரன்கள்) வந்த வேகத்திலேயே பெவிலியன் திரும்பினார். நன்றாக விளையாடிய சாய் சுதர்சன் 30 பந்துகளில் அரை சதம் கடந்தார். நன்றாக விளையாடி கொண்டிருந்த ஷாருக்கான், சாய் சுதர்சன் ஜோடியை சாய் கிஷோர் பிரித்தார். அவரது பந்து வீச்சில் கோவை அணியின் கேப்டன் ஷாருக்கான் (22 ரன்கள்) அவுட் ஆகி வெளியேறினார். அடுத்து வந்த அபிஷேக் தன்வர் (1 ரன்), சாய் சுதர்சன் 65 ரன்கள் (42 பந்துகள், 8 பவுண்டரி, 1 சிக்ஸ்), சூர்யா (0 ரன்), மணீஸ் (2 ரன்) என அடுத்தடுத்து விக்கெட்டுகள் பறிபோனது. இதனால் 17 ஓவர் முடிவில் கோவை கிங்ஸ் அணி 9 வி க்கெட்டுகளை இழந்து 138 ரன்கள் எடுத்தது.

சேப்பாக் சூப்பர் கில்லீஸ் வீரர்கள் சாய் கிஷோர் 3 விக்கெட்டுகள், சந்தீப் வாரியர் 4 விக்கெட்டுகள், சோனு யாதவ் 2 விக்கெட்டு வீழ்த்தினர். இதனை தொடர்ந்து 139 ரன்கள் வெற்றி என்ற இலக்குடன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியின் சார்பில் கவுசிக் காந்தி மற்றும் ஜெகதீசன் ஆகியோர் முதலாவதாக களமிறங்கினர். இந்த ஜோடியில் கேப்டன் கவுசிக் காந்தி 1 ரன்னில் கேட்ச் ஆகி அதிர்ச்சி அளித்தார். அவரைத்தொடர்ந்து ஜெகதீசனும் 2 ரன்களில் ஆட்டமிழந்தார். சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 4 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 14 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மைதானத்தில் மீண்டும் மழை பெய்ய தொடங்கியது. இதனால் போட்டி நிறுத்தி வைக்கப்பட்டது. அப்போது ராதாகிருஷ்ணன் 9 ரன்களுடன் களத்தில் இருந்தார். டக் வொர்த் லீவிஸ் விதிப்படி 5 ஓவர்கள் வீசியிருந்தால் மட்டுமே எந்த அணிக்கு கோப்பை என்று அறிவிக்க முடியும். ஆனால் மழையினால் 4 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்டதால் கோப்பை சேப்பாக் சூப்பர் கில்லீஸ், கோவை கிங்ஸ் ஆகிய இரு அணிகளுக்கும் பகிர்ந்து அளிக்கப்படுவதாக போட்டி நடுவர்கள் அறிவித்தனர். இதன்மூலம் டி.என்.பி.எல். வரலாற்றில் அதிக முறை சாம்பியன் பட்டம் வென்ற அணி (4 முறை) என்ற பெருமையை சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி தக்க வைத்துள்ளது. இதேபோல ஷாருக்கான் தலைமையிலான கோவை கிங்ஸ் அணி முதல் முறையாக இறுதி போட்டிக்குள் நுழைந்து பட்டத்தை வென்றுள்ளது.