சென்னையில் முதல் முறையாக சர்வதேச மகளிர் டென்னிஸ் போட்டி – அடுத்த மாதம் தொடக்கம்…!

சென்னை ஓபன் டபிள்யு.டி.ஏ. 250 சர்வதேச மகளிர் டென்னிஸ் போட்டி அடுத்த மாதம் தொடங்க உள்ளது. சென்னை, இந்தியாவில் முதல் முறையாக செஸ் ஒலிம்பியாட் போட்டி தமிழகத்தில் நடந்தது. சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் இந்த வரலாற்று சிறப்பு மிக்க போட்டி நடைபெற்றது. அடுத்து சென்னையில் சர்வதேச மகளிர் டென்னிஸ் போட்டி நடைபெற இருக்கிறது. ஏ.டி.பி. டென்னிஸ் போட்டி சென்னையில் 1997-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. 1997 முதல் 2001 வரை கோல்டு பிளேக் ஓபன் என்ற பெயரிலும், 2002 முதல் 2004 வரை டாடா ஓபன், 2005 முதல் 2009 வரை சென்னை ஓபன், 2010 முதல் 2017 வரை ஏர்செல் சென்னை ஓபன் என்ற பெயரிலும் இந்த போட்டி நடைபெற்றது. 21 ஆண்டுகள் ஏ.டி.பி. ஆண்கள் டென்னிஸ் போட்டி சென்னை நுங்கம்பாக்கம் ஸ்டேடியத்தில் நடைபெற்றது. 2018-ம் ஆண்டு இந்த போட்டி மராட்டிய மாநிலம் புனேக்கு மாற்றப்பட்டது. இந்த நிலையில் சென்னையில் முதல் முறையாக சர்வதேச மகளிர் டென்னிஸ் போட்டி நடத்தப்படுகிறது. சென்னை ஓபன் டபிள்யு.டி.ஏ. 250 சர்வதேச மகளிர் டென்னிஸ் போட்டி நுங்கம்பாக்கம் ஸ்டேடியத்தில் செப்டம்பர் 12-ந்தேதி தொடங்குகிறது. செப்டம்பர் 18-ந்தேதி வரை இந்த போட்டி ஒரு வாரம் நடக்கிறது. விளையாட்டை மேம்படுத்தும் நோக்கில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் செயல்பட்டு வருகிறார். அதன்படி சமீபத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டியை தமிழக அரசு மிகவும் பிரம்மாண்ட முறையில் நடத்தி முடித்தது. தற்போது சர்வதேச மகளிர் டென்னிஸ் போட்டியை நடத்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆதரவு கொடுத்துள்ளார். இந்த போட்டியின் முக்கிய ஸ்பான்சராக தமிழக அரசு உள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு டென்னிஸ் சங்க தலைவரும், முன்னாள் வீரருமான விஜய் அமிர்தராஜ் கூறியதாவது, செஸ் ஒலிம்பியாட் போட்டியை சிறப்பாக நடத்தி முடித்த தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கும், தமிழ்நாடு அரசுக்கும் பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன். அடுத்து செப்டம்பர் மாதம் நடைபெற உள்ள மகளிர் டென்னிஸ் போட்டி தொடரை வெற்றிகரமாக நடத்த ஆர்வமாக உள்ளோம். தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்திய அளவில் மகளிர் டென்னிஸ் பிரபலமாகவும், வளர்ச்சி அடையவும் இந்த போட்டி உதவும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.