“சிறந்த அணியுடன் கோப்பையை பகிர்வதில் மகிழ்ச்சி” – பா.சிவந்தி ஆதித்தன்

சிறப்பாக விளையாடிய அணியுடன் கோப்பையை பகிர்ந்து கொள்வது மகிழ்ச்சி அளிப்பதாக சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியின் உரிமையாளர் பா.சிவந்தி ஆதித்தன் தெரிவித்துள்ளார். கோவை, 8 அணிகள் பங்கேற்ற 6வது தமிழ்நாடு பிரிமீயர் லீக் (டி.என்.பில்.) 20 ஓவர் கிரிக்கெட் திருவிழாவின் இறுதி போட்டி கோவை ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி மைதானத்தில் நேற்றிரவு அரங்கேறியது. மகுடத்துக்கான இந்த பலப்பரீட்சையில் நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியும், கோவை கிங்ஸ் அணியும் மோதின. முதலில் ஆடிய கோவை கிங்ஸ் அணி 17 ஓவர் முடிவில் கோவை கிங்ஸ் அணி 9 வி க்கெட்டுகளை இழந்து 138 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 4 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 14 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மைதானத்தில் மீண்டும் மழை பெய்ய தொடங்கியது. இதனால் போட்டி நிறுத்தி வைக்கப்பட்டது. டக் வொர்த் லீவிஸ் விதிப்படி 5 ஓவர்கள் வீசியிருந்தால் மட்டுமே எந்த அணிக்கு கோப்பை என்று அறிவிக்க முடியும். ஆனால் மழையினால் 4 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்டதால் கோப்பை சேப்பாக் சூப்பர் கில்லீஸ், கோவை கிங்ஸ் ஆகிய இரு அணிகளுக்கும் பகிர்ந்து அளிக்கப்படுவதாக போட்டி நடுவர்கள் அறிவித்தனர்.