சினிமா தொழிலாளர்களுக்காக மருத்துவமனை கட்டும் நடிகர் சிரஞ்சீவி

தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகனாக இருக்கும் சிரஞ்சீவி சினிமா தொழிலாளர்கள் நலனுக்காக புதிய மருத்துவமனை கட்டப்போவதாக அறிவித்து உள்ளார். மறைந்த தனது தந்தை கொனிடேலா வெங்கட்ராவ் நினைவாக ஐதராபாத்தில் உள்ள சித்ராபுரி காலனியில் இந்த மருத்துவமனையை கட்ட இருக்கிறார். விரைவில் 10 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையாக இது செயல்பட தொடங்கும் என்றும் மருத்துவமனை கட்டுமான செலவு அனைத்தையும் ஏற்கும் திறன் தன்னிடம் உள்ளது என்றும் தெரிவித்து உள்ளார். ஏழை திரைப்பட தொழிலாளர்களுக்கு இந்த மருத்துவமனையில் இலவச சிகிச்சை அளிக்கப்பட உள்ளது. தெலுங்கு கிரிக்கெட் சங்கம் சிரஞ்சீவி கட்டும் மருத்துமனைக்கு ரூ.20 லட்சத்தை நன்கொடையாக வழங்க முன் வந்துள்ளது. சிரஞ்சீவி கூறும்போது, ”தெலுங்கு பட உலகில் அதிகம் சம்பாதித்து இருக்கிறேன். கோடிக்கணக்கில் செலவானாலும் மருத்துவமனையை கட்டி தெலுங்கு திரையுலகுக்கு திரும்ப கொடுக்கும் நேரம் இது” என்றார்.