ஐ.எஸ்.எல் கால்பந்து: ரஹீம் அலியை தக்கவைத்தது சென்னை அணி

2019-20 சீசனில் ஐஎஸ்எல் இறுதிப் போட்டிக்கு வந்த சென்னை அணியில் ரஹீம் அலியும் இடம் பெற்று இருந்தார். சென்னை, இந்தியன் சூப்பர் லீக் 2022- 2023 சீசனுக்காக பல்வேறு அணிகள் புதிய வீரர்களை ஒப்பந்தம் செய்து வருகின்றன. அந்த வகையில் சென்னையின் எப்.சி அணி, அணியை வலுவாக கட்டமைக்க புதிய வீரர்களை ஒப்பந்தம் செய்வதில் கவனம் செலுத்தி வருகிறது. கடந்த மாத தொடக்கத்தில் சென்னை அணி கானா கால்பந்து வீரர் குவமே கரிகாரியை ஒப்பந்தம் செய்தது. இவர் சமீபத்தில் நடந்து முடிந்த தாய்லாந்து லீக்கில் சிறப்பாக விளையாடியவர். அதன் பிறகு சென்னை அணி மேலும் ஒரு வெளிநாட்டு வீரரான குரோஷிய வீரர் பீட்டர் ஸ்லிஸ்கோவிக்கை ஒப்பந்தம் செய்தது. பின்னர் சென்னையை சேர்ந்த அஜித் குமாரை சென்னை அணி ஒப்பந்தம் செய்து இருந்தது. இந்த நிலையில் சென்னை அணி ரஹீம் அலியின் ஒப்பந்தத்தை நீட்டிப்பதாக தெரிவித்து உள்ளது. தற்போது சென்னை அணியில் இருக்கும் அவர் 2024 வரை கிளப்பில் தொடர்வார். 2019-20 சீசனில் ஐஎஸ்எல் இறுதிப் போட்டிக்கு வந்த சென்னை அணியில் ரஹீம் அலியும் இடம் பெற்று இருந்தார். சென்னை அணிக்காக மூன்று வருடங்களாக இவர் 40 போட்டிகளில் விளையாடி உள்ளார். சென்னையில் மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டு இருப்பது குறித்து ரஹீம் அலி கூறுகையில், “சென்னையின் எஃப்சியுடன் புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். வேறு அணிக்கு போவது குறித்து என் மனதில் ஒரு சந்தேகமும் இருந்ததில்லை” என அவர் தெரிவித்தார்.