உழைக்கும் மக்களுக்கு இலவசம் கொடுப்பதில் என்ன தவறு..? – கவிஞர் வைரமுத்து பேட்டி

உழைக்கும் மக்களுக்கு இலவசம் கொடுப்பதில் என்ன தவறு என்று கவிஞர் வைரமுத்து கூறியுள்ளார். சென்னை, சென்னை மதுரவாயலில் தனியார் கண் மருத்துவமனை மருத்துவர் சுரேந்தர் இல்லத்திருமண விழா நடைபெற்றது. இந்த திருமண நிகழ்ச்சியில் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின், கவிஞர் வைரமுத்து ஆகியோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். திருமண நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த கவிஞர் வைரமுத்து உழைக்கும் மக்களுக்கு இலவசங்கள் கொடுப்பதில் தவறு இல்லை என்ற தெரிவித்தார். இதுகுறித்து அவர் கூறியதாவது:- “சென்னையை சிங்காரச் சென்னையாக்கியதில் இன்றைய முதல் அமைச்சர் ஸ்டாலினுக்கு பெரிய பங்கு உண்டு. அவர் மேயராக இருந்த காலத்தில் எங்கள் சிங்காரம் கலைந்தாலும் கலையட்டும் சென்னையின் சிங்காரம் கலையவிடமாட்டோம் என்று இரவு பகலாக பணிபுரிந்தார். உலகத்தின் உயர்ந்த பொருளெல்லாம் இலவசம் தான். சூரிய ஒளி இலவசம் தான், காற்று இலவசம் தான், தண்ணீர் இலவசம் தான், உலகத்தின் உயர்ந்த பொருளெல்லாம் இலவசமாக இருக்கிறபோது எங்கள் உழைக்கும் மக்களுக்கு, நடுத்தர மக்களுக்கு, அடித்தட்டு மக்களுக்கு இலவசம் கொடுப்பதில் என்ன தவறு? நான் வரி கட்டுகிறேன், என்னுடைய வரி உழைக்கும் மக்களுக்கு உணவாகப் போகிறது. அதில் நான் பெருமையடைகிறேன்.” இவ்வாறு கூறினார்.