இறால் உணவுடன் ஒப்பிட்டு ராஸ் டெய்லருக்கு ஷேவாக் கூறிய பேட்டிங் அறிவுரை – சுயசரிதை புத்தகத்தில் ருசிகர தகவல்

இறால் உணவை ருசித்து சாப்பிடுவதுடன் ஒப்பிட்டு ஷேவாக் கூறிய வித்தியாசமான பேட்டிங் அறிவுரையை ராஸ் டெய்லர் தனது சுயசரிதை புத்தகத்தில் பகிர்ந்துள்ளார். புதுடெல்லி, இறால் உணவை ருசித்து சாப்பிடுவதுடன் ஒப்பிட்டு ஷேவாக் கூறிய வித்தியாசமான பேட்டிங் அறிவுரையை நியூசிலாந்து முன்னாள் வீரர் ராஸ் டெய்லர் தனது சுயசரிதை புத்தகத்தில் பகிர்ந்துள்ளார். நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ராஸ் டெய்லர், தான் கிரிக்கெட் வாழ்க்கையில் சந்தித்த அனுபவங்களை ‘பிளாக் அண்ட் ஒயிட்’ என்ற பெயரில் சுயசரிதை புத்தகமாக எழுதியுள்ளார். அதில் ஐ.பி.எல். போட்டியில் ஆடிய போது சந்தித்த சில அனுபவங்களை சுவைப்பட எழுதியுள்ளார். அதன் விவரம் வருமாறு:- 2012-ம் ஆண்டு ஐ.பி.எல். கிரிக்கெட்டில் டெல்லி அணிக்காக விளையாடினேன். ஒரு நாள் இரவு டெல்லியில் உள்ள ஷேவாக்கின் ஓட்டலுக்கு சென்றோம். அணியில் உள்ள பெரும்பாலான வீரர்கள் அங்குள்ள மெகா திரையில் பிரிமீயர் லீக் கால்பந்து போட்டியின் இறுதி சுற்றை பார்த்துக் கொண்டிருந்தனர். இந்த ஓட்டலில் உணவு மிக அருமையாக இருந்தது, அதிலும் இறால் உணவு தனிச்சுவை. நான் அவற்றை வெளுத்து கட்டினேன்.

மறுநாள் களம் இறங்கிய போது ஷேவாக் மைதானத்தில் நாலாபுறமும் பந்தை விரட்டியடித்து ரன் குவித்தார். நானோ நெருக்கடியில் தடுமாறினேன். என்னை அதிக தொகைக்கு எடுத்திருந்ததால், அதற்கு ஏற்ப விளையாட வேண்டி இருந்தது. இதனால் பேட்டிங்கின் போது பதற்றத்திற்கு உள்ளானேன். ஆனால் ஷேவாக்கோ ரொம்ப ரிலாக்சாக ஆடினார். அருகில் வந்த அவர், ‘ராஸ்….நீங்கள் இறாலை எப்படி ரசித்து ருசித்து சாப்பிட்டீர்களோ அதே போன்று கிரிக்கெட் விளையாட வேண்டும். கிரிக்கெட் குதூகலம் அளிக்கும் விளையாட்டு. ஜாலியாக ஆட வேண்டும்’ என்று அறிவுரை வழங்கினார். அதன் பிறகு அந்த வழியாக செல்லும் போதெல்லாம் இறாலை ஒப்பிட்டு பேட்டிங் செய்ய சொன்ன விஷயம் தான் எனக்கு நினைவுக்கு வரும். 2011-ம் ஆண்டு ஐ.பி.எல். போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடிய போது ஒரு சம்பவம். அப்போது நாங்கள் புலியை பார்க்க அங்குள்ள ரந்தம்போர் தேசிய பூங்காவுக்கு சென்றிருந்தோம். ராகுல் டிராவிட் உள்ளிட்ட வீரர்களும் வந்திருந்தனர். டிராவிட்டிடம் நான், ‘எத்தனை முறை புலியை பார்த்து இருப்பீர்கள்’ என்று கேட்டேன். அதற்கு அவர், ‘ஒரு போதும் புலியை பார்த்தது இல்லை. இது போன்று 21 தடவை சென்று இருக்கிறேன். ஒரு முறை கூட புலி கண்ணில் தென்பட்டதில்லை’ என்று கூறினார். நானாக இருந்திருந்தால் இத்தனை முறை ஏமாற்றத்தை சந்தித்த பிறகு, ‘போங்கப்பா….. நான் புலியை பார்க்க பூங்காவுக்கு எல்லாம் வரவில்லை. வீட்டில் டிஸ்கவரி சேனலில் பார்த்துக் கொள்கிறேன்’ என்று கூறியிருப்பேன்.

பாதுகாப்பு வாகனத்தில் சிறிது தூரம் சென்ற நிலையில் ரேடியா அழைப்பில் குறிப்பிட்ட இடத்தில் புலி நிற்பதாக டிரைவருக்கு தகவல் வந்தது. இதனால் டிராவிட் முகத்தில் செம திரில். 21 முறை சென்று புலியை பார்க்காத அவர் 22-வது பயணத்தில் அதுவும் அரைமணி நேரத்தில் புலியை பார்த்ததும் சிலிர்த்து போனார். அது ஒரு பாறையில் 100 மீட்டர் தூரத்தில் இருந்தது. அதே நேரத்தில் இன்னொரு வாகனத்தில் வந்த பார்வையாளர்கள் ராகுல் டிராவிட்டை பார்த்ததும் தங்களது கேமிராவில் கிளிக் செய்ய ஆரம்பித்தனர். நாங்கள் புலியை பார்த்துக் கொண்டிருந்த நிலையில் அவர்களுக்கு டிராவிட்டை கண்டதும் உற்சாகம் பீறிட்டது. புலியை விட அவரை பார்ப்பதில் ஆர்வம் காட்டினர். உலகம் முழுவதும் காடுகளில் கிட்டத்தட்ட 4 ஆயிரம் புலிகள் உள்ளன. ஆனால் ஒரே ஒரு ராகுல் டிராவிட் தான். இவ்வாறு டெய்லர் அதில் கூறியுள்ளார். ராஜஸ்தான் அணிக்காக ஆடிய போது ஒரு முறை டக்-அவுட் ஆனதால், எரிச்சலடைந்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் உரிமையாளர்களில் ஒருவர் தனது கன்னத்தில் 3-4 தடவை அறைந்ததாக அந்த புத்தகத்தில் டெய்லர் கூறியிருப்பது பரபரப்பை உண்டாக்கியுள்ளது. ஆனால் அவரை அறைந்தது யார் என்பது பற்றி அவர் எதுவும் குறிப்பிடவில்லை. இந்த விவகாரம் குறித்து நாங்கள் கருத்து சொல்ல விரும்பவில்லை என்று ராஜஸ்தான் அணியின் நிர்வாக உறுப்பினர்களில் ஒருவர் தெரிவித்துள்ளார்.