இன்னொரு 2-ம் பாகம் படத்தில் கமல்ஹாசன்

வேட்டையாடு விளையாடு படத்தின் இரண்டாம் பாகமும் உருவாக இருப்பதாக டைரக்டர் கவுதம் மேனன் உறுதிப்படுத்தி உள்ளார். கமல்ஹாசன் நடிப்பில் ஏற்கனவே விஸ்வரூபம் 2-ம் பாகம் வந்தது. தற்போது இந்தியன் 2-ம் பாகத்தில் நடித்து வருகிறார். சில பிரச்சினைகளால் நிறுத்திவைக்கப்பட்டுள்ள இந்தியன் 2 படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. படப்பிடிப்புக்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. கமல்ஹாசன் நடிப்பில் சமீபத்தில் திரைக்கு வந்து வசூல் குவித்த விக்ரம் படத்தின் 3-ம் பாகமும் தயாராக இருக்கிறது. தேவர் மகன் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கவும் திட்டம் வைத்துள்ளனர். இந்த நிலையில் வேட்டையாடு விளையாடு படத்தின் இரண்டாம் பாகமும் உருவாக இருப்பதாக டைரக்டர் கவுதம் மேனன் உறுதிப்படுத்தி உள்ளார். வேட்டையாடு விளையாடு படத்தின் இரண்டாம் பாகத்துக்கான திரைக்கதையை எழுதி முடித்து விட்டதாகவும், படப்பிடிப்பை தொடங்குவதற்கான நேரத்தை எதிர்பார்த்து இருப்பதாகவும் அவர் தெரிவித்து உள்ளார். கவுதம் மேனன் இயக்கத்தில் வேட்டையாடு விளையாடு படம் 2006-ல் திரைக்கு வந்து ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. நல்ல வசூலும் பார்த்தது. இதில் கமல்ஹாசன் போலீஸ் அதிகாரியாக நடித்து இருந்தார். நாயகிகளாக ஜோதிகா, கமாலினி முகர்ஜி ஆகியோரும், வில்லனாக டேனியல் பாலாஜியும் நடித்து இருந்தனர்.