ஆசிய கோப்பை கிரிக்கெட்: இந்தியா-ஹாங்காங் அணிகள் இன்று மோதல்

ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் இன்றைய ஆட்டத்தில் பலம் வாய்ந்த இந்தியாவுடன், கத்துக்குட்டி அணியான ஹாங்காங் மோதுகிறது. துபாய், 15-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது. இதில் துபாயில் இன்று (புதன்கிழமை) நடக்கும் 4-வது லீக் ஆட்டத்தில் இந்தியா- ஹாங்காங் (ஏ பிரிவு) அணிகள் மோதுகின்றன. இந்திய அணி தனது தொடக்க ஆட்டத்தில் பரம போட்டியாளரான பாகிஸ்தானை வீழ்த்தியது. இன்றைய ஆட்டத்திலும் வெற்றி பெற்று சூப்பர்4 சுற்றுக்கு முன்னேறும் முனைப்புடன் இந்திய அணி ஆயத்தமாகி வருகிறது. சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் இந்திய அணி ஹாங்காங்கை எதிர்கொள்வது இதுவே முதல்முறையாகும். அதே சமயம் 50 ஓவர் ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணி ஹாங்காங்குடன் 2 முறை மோதி இருக்கிறது. இதில் 2008-ம் ஆண்டில் 256 ரன்கள் வித்தியாசத்திலும், 2018-ம் ஆண்டில் 26 ரன்கள் வித்தியாசத்திலும் இந்தியா வெற்றி பெற்றது. 2018-ம் ஆண்டில் நடந்த ஆட்டத்தில் இந்தியா நிர்ணயித்த 286 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய ஹாங்காங் அணியில் தொடக்க வீரர்கள் முதல் விக்கெட்டுக்கு 174 ரன்கள் திரட்டி மிரட்டினர். அதன் பிறகு மிடில் வரிசை சீர்குலைந்ததால் 259 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. எனவே ஹாங்காங்கை எந்த வகையிலும் எளிதாக எடுத்துக் கொள்ளக்கூடாது என்று இந்திய வீரர்களை அணி நிர்வாகம் எச்சரித்துள்ளது. துபாய் ஆடுகளம் 2-வது பேட்டிங்குக்கே அனுகூலமாக இருப்பதால் ‘டாஸ்’ ஜெயிக்கும் அணி முதலில் பந்து வீசுவதற்கே முன்னுரிமை அளிக்கும். போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:- இந்தியா: ரோகித் சர்மா (கேப்டன்), லோகேஷ் ராகுல், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரவீந்திர ஜடேஜா, ஹர்திக் பாண்ட்யா, தினேஷ் கார்த்திக் அல்லது ரிஷப் பண்ட், புவனேஷ்வர்குமார், யுஸ்வேந்திர சாஹல் அல்லது ரவி பிஷ்னோய் அல்லது அஸ்வின், அவேஷ்கான், அர்ஷ்தீப் சிங். ஹாங்காங்: நிஜாகத் கான் (கேப்டன்), யாசிம் முர்தசா, பாபர் ஹயாத், கின்சித் ஷா, ஸ்காட் மெக்கன்சி, அய்ஜாஸ் கான், இசான்கான், ஆயுஷ் சுக்லா, ஜீஷன் அலி, முகமது ஹசான்பர், ஹரூன் அர்ஷாத்.