ஆசிய கோப்பையில் கோலி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார்- ஷேன் வாட்சன்

ஓய்வால் புத்துணர்ச்சி கிடைத்திருக்கும் கோலி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் ஷேன் வாட்சன் தெரிவித்துள்ளார். துபாய், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி ரன் குவிக்க திணறி வருகிறார். அவர் சர்வதேச கிரிக்கெட்டில் சதம் அடித்து மூன்று ஆண்டுகள் ஆகிறது. அவர் சுமார் ஒரு மாத ஓய்வுக்கு பிறகு நாளை மறுநாள் தொடங்கும் ஆசிய கோப்பை போட்டியில் விளையாடுகிறார். இந்த நிலையில் விராட் கோலி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்று ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் ஷேன் வாட்சன் தெரிவித்துள்ளார். விராட் கோலிக்கு ஓய்வு கிடைத்தால் மனதளவிலும், உடலளவிலும் புத்துணர்ச்சியுடன் இருப்பார். ஐ.பி.எல். போட்டியின் போது கூட அவரது ஆற்றல் சற்று குறைந்திருந்தது. அவர் எப்போதும் எழுச்சியுடன் காணப்படுபவர். ஆனால் அவரால் ரன் குவிக்க முடியவில்லை. நீங்கள் ஓய்வெடுக்க முடிந்ததால் குறிப்பாக இந்திய வீரர்கள் அதிக கிரிக்கெட் விளையாடும் சூழலில் கோலிக்கு ஓய்வு கிடைத்து இருக்கிறது. அது அவருக்கு தேவையான அனைத்தையும் மீண்டும் உருவாக்கி கொடுத்து இருக்கும். மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் புத்துணர்ச்சி பெற்று இருப்பார். கோலி ஒரு தரமான வீரர். அவர் சிறந்த பார்முக்கு திரும்புவார். அவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார். ஆசிய கோப்பையை இந்திய அணி வெல்லும் என்பது எனது கணிப்பு. அவர்கள் வலிமையான அணியாக உள்ளனர். இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி விசேஷமாக இருக்கும். ஏனென்றால் இந்திய அணியை வீழ்த்த முடியும் என்று பாகிஸ்தான் முழு நம்பிக்கையில் உள்ளது. இப்போட்டியில் யார் வெற்றி பெறுகிறார்களோ அந்த அணி கோப்பையை வெல்லும் என்று நினைக்கிறேன். இப்போட்டியில் இந்தியா வெற்றி பெறும் என்ற உணர்வு எனக்கு இருக்கிறது. அவர்களின் பேட்டிங் வரிசை வலுவாக இருக்கிறது. எனவே இந்திய அணியை கட்டுப்படுத்துவது கடினமாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார். இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி 28-ந்தேதி நடக்கிறது.