அமீர்கானை தொடர்ந்து ஹிருத்திக் ரோஷன் படத்துக்கு எதிர்ப்பு

விக்ரம் வேதா படத்தின் இந்தி ரீமேக்கில் சைப் அலி கான், ஹிருத்திக் ரோஷன் நடித்து வருகிறார்கள். சமீபத்தில் அமீர்கான் நடித்திருந்த லால் சிங் சத்தா படத்தை புறக்கணிக்க வேண்டும் என்று எதிர்ப்புகள் கிளம்பியது. அமீர்கான் நடித்து திரைக்கு வந்துள்ள லால் சிங் சத்தா படத்தை புறக்கணிக்க வேண்டும் என்ற ஹேஷ்டேக் வலைத்தளத்தில் கடந்த சில நாட்களாக டிரெண்டிங் ஆனது. சகிப்பு தன்மை குறைந்து வருவதால் குழந்தைகள் பாதுகாப்பை கருதி நாட்டை விட்டு வெளியேறி விடலாம் என்று எனது மனைவி சொன்னார் என்று அமீர்கான் சில வருடங்களுக்கு முன்பு பேசிய வீடியோக்களை தற்போது வலைத்தளத்தில் பகிர்ந்து அவரது படத்தை புறக்கணிக்கும்படி வற்புறுத்தினர். இந்நிலையில் பிரபல இந்தி நடிகர் ஹிருத்திக் ரோஷன் மும்பையில் லால்சிங் சத்தா படத்தை பார்த்து விட்டு படம் சிறப்பாக உள்ளது என்றும் படத்தை அனைவரும் பார்க்க வேண்டும் என்றும் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டார். இதையடுத்து ஹிருத்தி ரோஷன் நடித்து திரைக்கு வர உள்ள விக்ரம் வேதா படத்தை புறக்கணிக்கும்படி இணையத்தில் ஹேஷ்டேக் டிரண்டிங் ஆகி உள்ளது. அமீர்கான் படத்தை ஆதரித்த விளைவை சந்திக்க தயாராகுங்கள் என்று ஹிருத்திக் ரோஷனை கண்டித்து பலர் பதிவுகள் வெளியிட்டு வருகிறார்கள். இது திரைப்பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழில் மாதவன், விஜய்சேதுபதி நடிப்பில் வந்த விக்ரம் வேதா படத்தின் இந்தி ரீமேக்காக ஹிருத்திக் ரோஷனின் விக்ரம் வேதா தயாராகி உள்ளது குறிப்பிடத்தக்கது.